×

குழந்தையை கடத்தவந்ததாக நினைத்து வடமாநில வாலிபரை தாக்கிய பொதுமக்கள்

விழுப்புரம், மார்ச் 5: விழுப்புரத்தில் குழந்தையை கடத்தவந்ததாக நினைத்து வாலிபரை சரமாரியாக தாக்கிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது. இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரும் குழந்தை கடத்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிய பேருந்துநிலையம் எதிரே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துவந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு மூன்று வயது மதிக்கதக்க குழந்தை பெற்றோருடன் நின்றுகொண்டிருந்தபோது அந்த குழந்தையை, வாலிபர் கையால் சைகை காட்டி அருகில் வருமாறு கூறியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது தமிழ் தெரியாமல் இருந்ததும், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் என்பதும் தெரியவந்தது. குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலுக்கு உள்ளான வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. முதல்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

The post குழந்தையை கடத்தவந்ததாக நினைத்து வடமாநில வாலிபரை தாக்கிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : North State ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு;...